அருள்மிகு துவராகாநாதர் திருக்கோயில், துவாரகை

Print Friendly

அருள்மிகு துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் ஜகத் மந்திர்“) திருக்கோயில், துவாரகை, ஜாம்நகர் – 361 335 குஜராத் மாநிலம்.

+91-2892 – 234 080 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் துவராகாநாதர்(துவாரகீஷ்)
தாயார் பாமா, ருக்மணி, ராதா
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சுதாமபுரி
ஊர் துவாரகை
மாவட்டம் அகமதாபாத்
மாநிலம் குஜராத்

ஜராசந்தன் கம்சனின் மைத்துனன். இவனது தங்கையைத்தான் கம்சன் திருமணம் செய்திருந்தான். கண்ணன் கம்சனைக் கொன்றதால், தங்கை பூவிழந்ததைப் பொறுக்காத ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் படையை தோற்கடித்து அனைவரையும் கொன்ற கண்ணன், பிற்காலத்தில் நடக்கவிருந்த மகாபாரத யுத்தத்தைக் கணக்கில் கொண்டு ஜராசந்தனை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான். உயிர்தப்பிய ஜராசந்தன் கண்ணனைப் பழிவாங்க காத்திருந்தான். இவர்களைத் தவிர காலயவணன் என்ற மன்னனும் கண்ணனைக் கொல்ல திட்டம் வைத்திருந்தான். தன்னால் யாதவ குலத்துக்குத் தீங்கு வரக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தன் குலத்தாருடன் மதுராவில் இருந்து இடம் பெயர்ந்து, சவுராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிக்கு வந்து விட்டார். அங்கே அவர்களுக்கு விஸ்வகர்மா பாதுகாப்பான ஒரு நகரத்தை அமைத்துக் கொடுத்தார். கலையழகு மிக்க இந்நகரை கடலுக்கு நடுவே அமைக்க சமுத்திரராஜன் இடம் கொடுத்து உதவினான். 12 யோசனை பரப்புள்ள இடம் தரப்பட்டது. துவாரகையைத் தங்கத்தாலேயே இழைத்தார் விஸ்வகர்மா. இதனால் இது தங்க நகரம்எனப்பட்டது. கண்ணன் தனது அவதாரம் முடிந்து மரணமடையும் வேளையில், வேடன் ஒருவன் அவன் மீது அம்பெய்தான். அப்போது துவாரகை கடலில் மூழ்கி விட்டது. பின்னர், இப்போதுள்ள, புதிய துவாரகை அரபிக்கடலில் கட்ச் வளைகுடா பகுதியில் எழுந்தது.

பகவத்கீதை, ஸ்கந்தபுராணம், விஷ்ணு புராணம், ஹரிவன்ஷ் ஆகிய நூல்களில் இந்நகரம் தங்கத்தால் வடிக்கப்பட்ட தகவல் கூறப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடலில் மூழ்கிய துவாரகையின் அழிந்து போன சில பகுதிகளை கண்டெடுத்துள்ளனர். இந்தியாவின் ஏழு தொன்மை மிக்க நகரங்களில் இதுவும் ஒன்று.

மூலவர் துவாரகீஷ் (துவராகாநாதர்) கற்சிலை ஒரு மீட்டர் உயரமுள்ளது. இவர் நான்கு கரங்களுடன் உள்ளார். கோமதி நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது.

துவாரகையில் இருந்து 32 கி.மீ., தொலைவில் பேட் துவாரகை, முல் துவாரகை என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரிஜினல் துவாரகை அமைந்துள்ளது. இதைப் படகுகளில் சென்று அடையலாம். இது தனித்தீவாக காட்சியளிக்கிறது. ராமந்த்விப் தீவு என இதை அழைக்கின்றனர். கிருஷ்ணன் தன் குடும்பத்துடன் இங்கு தங்கியிருந்தார் என சொல்கிறார்கள். பாமா, ருக்மணி, ராதா ஆகியோருக்கு தனித்தனி அறைகள் இங்கு இருந்தனவாம்.

கோபிதூலாப் என்ற இடத்தில் புண்ணியதீர்த்தமாடும் படித்துறை உள்ளது. இங்கே கிருஷ்ணன் பல கோபிகைகளை நீரில் மூழ்க வைத்து மோட்சம் அளித்தார். இங்கு மண், கோபி சந்தனம் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை நெற்றி, மார்பு, கைகளில் நாமமாக இட்டுக் கொள்கின்றனர். சிலர் பூசுகின்றனர். கிருஷ்ணரின் மனைவியான ருக்மணி கோயில் இங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது. இது 1600 ஆண்டுகள் பழமையானது. கண்ணனைப் பெற்ற தாய் தேவகி, அண்ணன் பலராமன் ஆகியோருக்கும் கோயில்கள் உள்ளன. கோயில் வாசலில் அம்பாஜி (குஜராத்தின் காவல் தெய்வமான அம்பிகை) சன்னதியும், உள்ளே துளசி மாதா சன்னதியும் இருக்கிறது. துளசிக்கு சன்னதி இருப்பது அநேகமாக இங்கு மட்டுமே. பாரதயுத்தம் முடிந்த பிறகு குந்திதேவி இங்கு வந்து கண்ணனைச் சந்தித்தாள். “உன்னை இனி எப்படி தரிசிப்பேன்?” எனக் கேட்டு அழுத அவளிடம், “உனக்கு எந்தக்கஷ்டம் வந்தாலும் நானே உன்னைக் காப்பாற்ற வந்து விடுவேன்என்றாராம். உடனே குந்தி சொன்னாளாம். “கண்ணா! அப்படியானால், தினமும் எனக்கு ஒரு கஷ்டத்தைக் கொடுஎன்றாளாம்.

போர்ப்பந்தர், துவாரகைக்கும் பேட் துவாரகைக்கும் இடையில் உள்ளது. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரிஎனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு, தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். கண்ணனுக்கு அவல் கொடுத்த காட்சி அழகிய ஓவியமாக இங்கு வடித்துள்ளனர். இறைவனுக்கு 16 ஆரத்தி என்ற தீபாராதனை தினமும் நடத்தப்படும். இதுவே முக்கிய தீபாராதனை. பெருமாளின் விஸ்வரூபமான திரிவிக்கிரமனைத் தரிசித்த பலன் இப்பூஜையைக் கண்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

துவாரகையில் இருந்து 12 கி.மீ., தொலைவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான நாகேஸ்வரம் மகாதேவர் கோயில் உள்ளது.

இந்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானமும், மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம்.

திருவிழா:

கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்ற உறியடித்திருநாள் . கோகுலாஷ்டமி அன்று பாவன் பேடாஎன்ற நடனத்தை பெண்கள் ஆடுவர். ஒவ்வொரு பெண்ணும் 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு ஆடும் இந்த நடனம் பார்க்க அருமையாக இருக்கும்.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *