அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் - 628 802.
+91- 461 232 1486(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பழமை: – 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர்: – ஆறுமுகமங்கலம்
மாநிலம்: – தமிழ்நாடு
பாடியவர் - ஆதிசங்கரர் பாடல் பெற்ற தலம்.
தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது புதுமையான தகவல்.
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் தயார். அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.
கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளர். அரசன் வேண்டியதற்கு இணங்கி விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் என அழைக்கப்படுகிறார். யாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.
“விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.
ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் “கணேச பஞ்சரத்தினம்‘ பாடி, பின் திருச்செந்தூர் சென்று “சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம்‘ பாடி வியாதி நீங்கப் பெற்றார் என்பது வரலாறு.
கோயில் அமைப்பு :
ஆரம்ப காலத்தில் இந்த ஊர் குளத்தின் தென்கரையில் அமைக்கப்பட்டது. அங்கு ஆயிரத்தெண் விநாயகரை நிறுவி வழிபட்டனர். முதலில் கருவறையும் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் காளகத்தீசுவரர், கல்யாணி அம்மன் சன்னதிகளுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டது. பிறகு கோயில் விரிவடைந்தது. திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் தரப்பட்டன. சமீப காலத்தில் சுற்று மண்டபமும், மேற்கூரை தளமும் அமைக்கப்பட்டன.
திருவிழா - சித்திரை மாதத்தில் பத்துநாள் பிரம்மோற்சவத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஏழாம் நாளன்று ஐந்து முகங்களுடன் கூடிய ஹேரம்ப கணபதி நடராஜருடன் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
வேண்டுதல்கள்:
அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை.
வீடு கட்ட, திருமண வேலைகள் ஆரம்பிக்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க என நாம் எந்த காரியம் தொடங்கினாலும் முதற்கடவுளின் முதல் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் போதும் அதில் எவ்வித தடைகளும் வராமல் இவர் பார்த்துக்கொள்வார் என்பது நம்பிக்கை.
வேண்டியது நிறைவேறியதும் 108, 1008 தேங்காய் உடைத்து விநாயகரை வழிபடுகிறார்கள். அத்துடன் 108 தீப வழிபாடும் நடக்கிறது.
| Tweet |
|
Posted: June 19th, 2011 under ஆலயங்கள், கணபதி ஆலயங்கள், தூத்துக்குடி.
Comments: none










Write a comment