அருள்மிகு வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில், தஞ்சாவூர்
அருள்மிகு வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர்
தல விருட்சம்: – நாகலிங்க மரம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – கீழவாசல்
மாநிலம்: – தமிழ்நாடு
வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனிடம் வந்து முறையிட்டனர். அவரோ பாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கித் தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். விநாயகரையே மணம் புரிந்தாள். அதுவே இந்தத் தலம் என்கிறது தல புராணம்.
இக்கோயிலை வெள்ளை விநாயகர் கோயில் என்று கேட்டால் தான் அனைவருக்கும் தெரியும். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக நம்பிக்கை. அதேநேரம் உற்சவர், மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார். வியாழக் கிழமைகளில் பைரவருக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. நடராஜரின் சுதைச் சிற்பத்தையும் இங்கு காணலாம்.
சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்ற பெயரும் உண்டு.
திருவிழா:
விநாயக சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு கிடையாது. அன்று காலை முதல் மாலை வரை, தொடர்ந்து திருமுழுக்காட்டு நடைபெறுமாம். அன்றிலிருந்து மூன்றாம் நாள் சந்தனக்காப்பு அலங்காரம்.
ஆவணி மாதம் 10 நாள் நடைபெறும் விழாவில், விநாயக சதுர்த்திக்கு மறுநாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
கோரிக்கைகள்:
திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், கொழுக்கட்டை படைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
| Tweet |
|
Posted: June 19th, 2011 under ஆலயங்கள், கணபதி ஆலயங்கள், தஞ்சாவூர்.
Comments: none










Write a comment